மஹாபாரதம் பகுதி 71: குருஷேத்திர போருக்குப் பிறகு பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் என்ன நேர்ந்தது?
குருஷேத்திரப் போரில் வெற்றியடைந்த பிறகு திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் என்ன நேர்ந்தது? தனது உடலோடு தேவலோகத்தை அடைவதற்கு தகுதியுள்ள ஒரே பாண்டவராகக் கருதப்பட்டவர் யார்? மற்றவர்கள் எல்லாம் எவ்வாறு இறந்தார்கள்? போருக்குப் பின்னான பாண்டவர்களின் வாழ்க்கையை இந்த பகுதியில் விவரிக்கிறார் சத்குரு.

போர் முடிவடைந்த பிறகு, அரசாள்வதற்காக பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் குடியமர்ந்தார்கள். யுதிஷ்டிரன் நீதி தவறாது ஆண்டு வந்தான். ஆனால் காலம் செல்லச் செல்ல, லட்சக்கணக்கான மரணங்கள் தங்கள் கைகளால் நிகழ்ந்ததையும், தாங்களும் மற்றவர்களும் கடந்து வந்த பெரும் இன்னல்களையும் அவர்கள் மறந்தே போனார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் அவதாரம் அவர்கள் உடனிருப்பதும், வாழ்க்கை நெடுக கிருஷ்ணர் அவர்களுக்கு உரைத்து வந்த அனைத்தும் - மெல்ல மெல்ல பழைய ஞாபகங்களாக மறைந்து போயின. ராஜ்ஜியத்தின் அன்றாட நிகழ்வுகள் அவர்களுக்குப் பிரதானமாகிவிட்டன.
அவர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள், ஆனால் நன்றாகச் செயல்படுவதற்கும் தெய்வீகத்தின் அருள் துணையோடு செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழ்வில் அருள் நிறைந்திருந்தால், ஒரு எளிய துறவி கூட மகிமை மிக்கவராய்த் தெரிவார். மலைபோல் குவிந்திருக்கும் தங்கத்தாலும், வைரங்களாலும், பட்டினாலும் கீர்த்தி வந்துவிடாது. உங்களை நீங்கள் எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே மகிமை உங்களை வந்தடையும். அந்த ஒரு நடத்தை, தெய்வீகம் உங்களின் உடனிருந்தால் மட்டுமே வரும்.
அவர்கள் வெற்றிகரமானவர்களாக திகழ்ந்தார்கள், தேசங்களைக் கைப்பற்றினார்கள், அஸ்வமேத யாகம் நடத்தினார்கள், அந்தப் பகுதி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். தான் சுமக்கும் பொறுப்புகளோடு, கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தையையும் நினைவில் வைத்து, தன்னால் இயன்றளவு அதன்படியே வாழவும் பெரும்பாலும் யுதிஷ்டிரன் மட்டுமே முயற்சி செய்து வந்தான். மற்ற அனைவரும் மெல்ல மெல்ல அரசர்களானார்கள், அரசருக்கு அருகாமையில் இருப்பதிலும், அரசரின் சகோதரர்களாக இருப்பதிலும் இன்பம் கொண்டார்கள். அவர்கள் பெரும் ஆணவத்தோடு நடந்துகொள்ளவில்லை; வேறு யாரையும் தங்கள் சுயநலத்திற்காக சுரண்டவில்லை - தங்கள் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்தார்கள்.
அவர்கள் வயோதிகத்தை எட்டியபோது, "பரீக்ஷித் ஒரு நல்ல இளைஞனாக வளர்ந்துவிட்டான். அவனுக்கு முடிசூட்டிவிட்டு நமது வாழ்வை நாம் நிர்ணயித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று முடிவு செய்தார்கள். நீங்கள் இதை கவனிக்க வேண்டும், அவர்கள் கிருஷ்ணரோடு வாழ்ந்தார்கள், தெய்வீகம் அவர்களின் உடனிருந்த போதிலும், அவர்கள் தங்கள் வழியை தாங்களாகவே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அபிமன்யுவின் மகனும், அர்ஜுனனின் பேரப்பிள்ளையுமான பரீக்ஷித் குரு வம்சத்தின் அடுத்த சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டான். பாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் மேற்கொள்ள தீர்மானித்தார்கள். அஸ்தினாபுர நகரை விட்டு அவர்கள் வெளியேறும்போது, பெருந்திரளாக மக்கள் கூடினார்கள். அவர்கள் அங்கே நீண்ட காலமாய் வாழ்ந்திருந்தார்கள். பலவிதமான சோதனைகளையும் தடைகளையும் கடந்து பாண்டவர்கள் வெற்றிகரமாக திகழ்ந்ததை அங்கிருந்த மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் கண்கூடாக கண்டிருந்தார்கள். 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பிறகு, பாண்டவர்கள் விடைபெறுவது, ராஜ்ஜியத்தில் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தது.
யுதிஷ்டிரன், "நாம் சுமேரு மலையின் மீது ஏறுவோம்" என்றான்
Subscribe
நடைப்பயணத்தைத் துவங்கிய பாண்டவர்களும் திரௌபதியும் பல வாரங்களுக்கு தொடர்ந்து நடந்தார்கள். செங்குத்தான மலைச்சரிவுகளில், ஒரு நாள், திரௌபதி தவறி வீழ்ந்தாள்.
திகைப்படைந்த நான்கு சகோதரர்களும், "திரௌபதி வீழ்ந்துவிட்டாள்" என்று அலறினார்கள்.
ஆனால் யுதிஷ்டிரன் திரும்பிக்கூட பார்க்கவில்லை - அவன் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தான். நால்வரும் தொடர்ந்து நடந்து யுதிஷ்டிரனை நெருங்கியதும், பீமன் கேட்டான், "திரௌபதி தன் வாழ்வில் பெரும் இன்னல்களை சந்தித்திருக்கிறாள். எல்லா காலத்திலும் நம்மோடு நின்றிருக்கிறாள். அவள் ஏன் விழவேண்டும்? அவள் செய்த தவறு என்ன?"
யுதிஷ்டிரன் கூறினான், "தனது ஐந்து கணவர்களையும் சமமாக நேசிப்பதாக அவள் உறுதி ஏற்றாள், ஆனால் அவளால் ஒருபோதும் அப்படி நடந்துகொள்ள முடியவில்லை. அவள் எப்போதுமே அர்ஜுனனை நேசித்ததோடு, அவனது மனைவியாக அவனுடன் மட்டுமே இருப்பதற்கு ஏங்கினாள். தனது கடமையை மட்டுமே நம்மோடு நிறைவேற்றினாள். திரௌபதியின் காதல் அர்ஜுனன் மீது மட்டுமே இருந்தது. அதோடு கர்ணனும் குந்தியின் மகனே என்பதை அறிந்தபோது, தான் ஏன் அவனையும் அடையவில்லை என்று வியப்படைந்தாள். இந்த இரு காரணங்களாலும் அவள் வீழ்ந்துவிட்டாள்."
அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். பிறகு நகுலன் வீழ்ந்தான்.
மற்றவர்கள் யுதிஷ்டிரனிடம், "நகுலன் ஏன் வீழ்ந்தான்?" என்று கேட்டார்கள்.
"நகுலன் மிகச்சிறந்த ஆணழகன். தனது தோற்றம் குறித்து மிகுந்த பெருமிதம் கொண்டிருந்தான். அவனது தற்பெருமையே அவன் வீழ்வதற்கு காரணமானது" என்று கூறினான் யுதிஷ்டிரன்.
அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அடுத்து சகாதேவன் வீழ்ந்தான். அவர்கள், "இவன் ஏன் வீழ்ந்தான்? இவன் ஒரு வார்த்தை சொல்வதே அபூர்வமாயிற்றே" என்று வினவினார்கள்.
அதற்கு யுதிஷ்டிரன், "எப்போதேனும் ஒரு வார்த்தை மட்டுமே பேசுவது, அவனது தன்னடக்கத்தால் அல்ல, அவன் மமதை கொண்டவனாக இருந்ததால்” என்றான்.
பிறகு பீமன் வீழ்ந்தான். அர்ஜுனன், "பீமன் ஏன் விழ்ந்தான்? அவன் மிகவும் அன்பானவனும், தூய்மையானவனும் ஆயிற்றே" என்று கேட்டான்.
"அவனது பெருந்தீனி தின்னும் ஆசையால், ஒரு மனிதனைப் போல் உண்ணாமல், பன்றியைப் போலவே உண்டான். அதோடு மற்றவர்கள் துன்பப்படுவதை இரசிப்பவனாகவும் இருந்தான்" என்று மறுமொழி அளித்தான் யுதிஷ்டிரன்.
மற்றவர்களின் துன்பத்தை நீங்கள் ரசிப்பீர்களானால், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்களே உங்கள் சவப்பெட்டியின் மீது ஆணி அறைந்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். சில நேரங்களில் உங்கள் செயல் மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடும், ஆனால் நீங்கள் ஒருபோதும் அதை ரசிக்கக்கூடாது. மற்றவர்கள் படும் துன்பத்தை ரசித்துக்கொண்டு, உங்கள் வாழ்வில் நலம் சேர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களானால், நீங்கள் முட்டாள்களின் உலகத்தில் வாழ்கிறீர்கள் என்று பொருள். அதுதான் பீமனின் நிலையாக இருந்தது.
யுதிஷ்டிரன் மேலும் கூறினான், "மற்றவர்களின் துன்பத்தை, தான் ரசிக்க வேண்டும், இல்லையென்றால் தனது வெற்றி முழுமை அடையாது என்று பீமன் நம்பினான், அதற்காகவே அவன் வீழ்ந்தான்."
பின்பு அர்ஜுனனும் வீழ்ந்தான், இப்போது கேள்வி கேட்க அங்கே யாரும் மிஞ்சவில்லை.
யுதிஷ்டிரனின் உதடுகள் முணுமுணுத்தன. ”உலகின் தலைசிறந்த வில்லாளியாக அவன் இல்லாதபோதும், அந்த ஒரு ஆணவத்தோடு வாழ்ந்தான் அர்ஜுனன். அவன் மாபெரும் வில்லாளி தான், ஆனால் தலைசிறந்தவன் அல்ல. தான் மிகச் சிறந்த வில்லாளியாக வேண்டும் என்பதற்காக, வேறொருவரின் கட்டை விரலை வெட்டவும் துணிந்தவன்; என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்காதவன், இருப்பினும் எப்போதும் கவலையோடு இருந்தான், "ஒருவேளை நாளை காலை யாரோ ஒரு இளைஞன் வந்து என்னை விட சிறப்பாக அம்புகளை எய்பவனாக அவன் இருந்தால், அதன் பிறகு நான் என்ன செய்வேன்?" இப்படி ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடே அவன் எப்போதும் வாழ்ந்தான், அதனாலேயே அவன் வீழ்ந்தான்"
யுதிஷ்டிரன் மட்டும் தனி ஒருவனாக தொடர்ந்து நடந்தான். பிறகு யுதிஷ்டிரனை அழைத்துக்கொள்ள இந்திரன் தனது வாகனத்தை அனுப்பி வைத்தான். என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் முழுமையாக நல்லொழுக்கத்தோடு வாழ்ந்து வந்து சேர்ந்தால், தேவலோகத்திற்கு உங்கள் உடலோடே நீங்கள் செல்ல முடியும், அதாவது நீங்கள் அதை அனுபவிக்க முடியும். நீங்கள் உடல் இல்லாமல் தேவலோகத்திற்கு சென்று, அங்கே உணவு உண்ண முயற்சி செய்தால் அது கீழே விழுந்துவிடும். எனவே யுதிஷ்டிரன் தன் உடலுடனேயே அழைத்துச் செல்லப்பட இருந்தான்.
அந்த வாகனம் வந்ததும் அதிலிருந்த தேவலோகத்தை சேர்ந்த பாதுகாவலர்கள், "உள்ளே வாருங்கள்! நாங்கள் உங்களை அழைத்துச் செல்லவே வந்துள்ளோம். ஆனால் இந்த நாய் எங்கே வந்தது?" என்றார்கள்.
திரும்பிப் பார்த்த யுதிஷ்டிரன் தனக்கு பின் ஒரு நாய் இருப்பதை கண்டான். அவர்கள் அஸ்தினாபுரத்து வீதிகளில் உலவிய போது அவர்களைத் தொடர்ந்து வந்த நாய் தான் அது என்பதைக் கண்டுகொண்டான்.
"அஸ்தினாபுரத்தில் இருந்து என்னுடன் இத்தனை தூரம் இந்த நாயும் பயணம் செய்து வந்துவிட்டது. மற்ற அனைவரும் வீழ்ந்துவிட்டார்கள், ஆனால் இவன் இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டான், எனவே இவனுக்கும் தகுதி இருக்கிறது என்றே கருதுகிறேன். என்னோடு இவனும் வரட்டும்" என்றான் யுதிஷ்டிரன்.
ஆனால் தேவ காவலர்களோ, "தேவலோகத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை!" என்றார்கள்.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.